சென்னையில் கொரோனா நோயாளிகளை 4 வகையாக பிரித்து சிகிச்சை - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்
சென்னையில் கொரோனா நோயாளிகளை 4 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை அம்பத்தூர் மண்டலம் அத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெருபவர்கள் 4 வகைகளாக பிரிக்கப்படுகிறார்கள். மூச்சு திணறல் மற்றும் அறிகுறி அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைவான அறிகுறி உள்ளவர்கள் கொரோனா சிகிச்சை மையத்துக்கும், மிக குறைவான அறிகுறி உடையவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கும், எந்த ஒரு அறிகுறியும் இன்றி கொரோனா தொற்று உடையவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்துதல் என 4 வகைகளாக சிகிச்சை பிரிக்கப்பட்டுள்ளது.
அத்திப்பட்டு கொரோனா மையத்தில் 4 ஆயிரத்து 500 முதல் 5 ஆயிரம் படுக்கைகள் வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். சென்னை மாநகராட்சியில் இதுவரை 2.35 லட்சம் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நுட்பம்
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் தொலைதொடர்பு தகவல் தொழில் நுட்பம் மூலம் காண்காணிக்கபட்டு வருகின்றனர். அவர்கள் வெளியே நடமாடினால் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை தகவல் கிடைக்கும். அந்த தகவல் கிடைத்தவுடன் மாநகராட்சி மூலம் சம்பந்தப்பட்டவர் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு 10 ஆயிரம் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் வெளியே நடமாடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. சென்னையில் இதுவரை 6 ஆயிரத்து 279 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story