நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண் டாக்டர்களுக்கு கொரோனா - ஆய்வக பரிசோதனைபிற ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றம்


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண் டாக்டர்களுக்கு கொரோனா - ஆய்வக பரிசோதனைபிற ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 24 Jun 2020 4:45 AM IST (Updated: 24 Jun 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண் டாக்டர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஆய்வக பரிசோதனை பிற ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுதவிர நெல்லை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள், சிறப்பு முகாம்களில் இருப்பவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த மாதிரிகளும் அங்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

2 பெண் டாக்டர்களுக்கு தொற்று

இதற்காக சிறப்பு எந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும் பரிசோதனை பணி நடைபெற்று வருகிறது. 2 மாதங்களுக்கு மேலாக இந்த பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், பணியாளர்கள் மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஆய்வக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் ஒரு பணியாளர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.

இதையடுத்து ஆய்வக பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண் டாக்டர்களுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பரிசோதனை முடிவில் தாமதம்

இந்த நிலையில் ஆய்வகத்தில் பரிசோதனை பணியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கான பரிசோதனை மட்டும் அங்கு மேற்கொள்ளப்படுகிறது. சோதனை சாவடி, முகாம்களில் சேகரிக்கப்படும் சளி மாதிரிகள் தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனை முடிவு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

Next Story