நாக்பூர் மாநகராட்சி கமிஷனர் துக்காராம் முண்டே மீது மோசடி புகார்
நாக்பூர் மாநகராட்சி கமிஷனர் துக்காராம் முண்டே மீது மாநகராட்சி சார்பில் போலீசில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நாக்பூர்,
மராட்டியத்தில் தனது நேர்மையான செயல்பாடுகள் மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தற்போது பாரதீய ஜனதா அதிகாரத்தில் இருக்கும் நாக்பூர் மாநகராட்சி கமிஷனராக இருந்து வருகிறார். வழக்கம் போல் நாக்பூரில் துக்காராம் முண்டே மக்கள் பிரநிதிகளிடம் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.
இந்தநிலையில், அவர் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக அவருக்கு எதிராக நாக்பூர் மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று மேயர் சந்திப் ஜோஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாக்பூர் மாநகராட்சி கமிஷனர் துக்காராம் முண்டே, மாநகர மேம்பாட்டு கழக (எஸ்.எஸ்.சி.டி.சி.எல்.) தலைமை நிதி அதிகாரி மோனா தாக்கூர், கணக்கு அலுவலர் அம்ருதா தேஷ்கர் ஆகியோர் 2 ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கியதில் தங்களது பதவிகளை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
அரசின் நிலையான வைப்பு தொகையில் இருந்து ரூ.18 கோடி வழங்கி அவர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
மறுப்பு
இது தொடர்பாக அவர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிவு செய்யக் கோரி மாநகராட்சி அவை தலைவர் சந்தீப் ஜாதவ் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி கமிஷனர் துக்கராம் முண்டேயிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், நான் நாக்பூர் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பு ஏற்பதற்கு முன்னரே அந்த திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். ஒப்பந்ததார்கள் வேலை முடிந்தபின்னர் அதற்கான பில்களை சமர்ப்பித்தனர். அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படியே பணம் வழங்கப்பட்டது, என்றார்.
துக்காராம் முண்டே மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதை நாக்பூர் துணை போலீஸ் கமிஷனர் வனிதா சாஹூ உறுதிப்படுத்தினார். நாங்கள் புகாரில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை சரி பார்க்க வேண்டும். முழுபிரச்சினையையும் விசாரிக்க வேண்டும்.
உண்மையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story