ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை


ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 24 Jun 2020 5:15 AM IST (Updated: 24 Jun 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர், நகைக்கடை அதிபரிடம் ரூ.1½ கோடி லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியவர் ஆவார். அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூரு ஜெயநகரில் வசித்து வருபவர் விஜய்சங்கர். இவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். பெங்களூரு மாவட்ட கலெக்டராக விஜய்சங்கர் பணியாற்றி இருந்தார். தற்போது கர்நாடக அரசின் சகாலா திட்டத்தில் இயக்குனராக பணியாற்றி வந்தார். நேற்று காலையில் அவர் வழக்கம் போல பணிக்கு வந்திருந்தார். மதியத்திற்கு பின்பு விதானசவுதாவில் இருந்து ஜெயநகரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்திருந்த விஜய்சங்கர் படுக்கை அறைக்கு சென்றிருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விஜய்சங்கரின் மனைவி மற்றும் மகள்ஆகியோர் மாலை 6.30 மணியளவில் கதவை திறந்து பார்த்தார்கள். அப்போது விஜய்சங்கர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு மனைவியும், மகளும் கதறி அழுதார்கள். இதுபற்றி உடனடியாக திலக்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடிதம் எதுவும் கிடைக்கவில்லை

உடனே சம்பவ இடத்திற்கு திலக்நகர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. முன்னதாக தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீநாத் ஜோஷி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் தனது வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அவர் தற்கொலை செய்திருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. விஜய்சங்கர் தற்கொலை செய்யும் போது, அவரது மனைவி, மகள்ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். விஜய்சங்கர் வீட்டில் இருந்து, அவர் எழுதியதாக கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

ரூ.1½ கோடி லஞ்சம்

ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் கடந்த ஆண்டு(2019) பெங்களூரு மாவட்ட கலெக்டராக பணியாற்றி இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் சிவாஜிநகரை சேர்ந்த மன்சூர்கான் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நகைக்கடைகள் நடத்தி முறைகேடுகள் செய்திருந்தார். அதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்கும்படி பெங்களூரு கலெக்டராக இருந்த விஜய்சங்கருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் மன்சூர்கான் நடத்தி வரும் நகைக்கடைகளில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறி விஜய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அளித்திருந்தனர். இந்த அறிக்கை அளித்த சில மாதங்கள் கழித்து மன்சூர்கான் நடத்திய நகைக்கடைகளில் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.2,500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

இந்த முறைகேடு சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் மன்சூர்கான் நகைக்கடைகளில் முறைகேடு நடக்கவில்லை என்று கூறி அரசிடம் அறிக்கை அளிக்க விஜய்சங்கர் ரூ.1½ கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பணி இடைநீக்கம்-கைது

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு விசாரணை குழு போலீசார், விஜய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். அதே நேரத்தில் விஜய்சங்கரை கர்நாடக அரசு பணி இடைநீக்கம் செய்திருந்தது.

சிறையில் இருந்த விஜய்சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். சமீபத்தில் தான் அவரை சகாலா திட்டத்தில் இயக்குனராக கர்நாடக அரசு நியமித்திருந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் மீது வேறு எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை.

பரபரப்பு

நகைக்கடை அதிபர் மன்சூர்கானிடம் ரூ.1½ கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் விஜய்சங்கருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்ததாலும், சிறைக்கு சென்று வந்ததாலும் மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரூ.1½ கோடி லஞ்ச வழக்கு காரணமாக ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

என்றாலும், அவரது தற்கொலைக்கான சரியான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. அதுகுறித்து திலக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த டி.கே.ரவி தற்கொலை செய்திருந்தார்.

Next Story