போலீசார் தாக்கியதில் சாவு? தந்தை-மகன் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய 3 டாக்டர்கள் குழு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


போலீசார் தாக்கியதில் சாவு? தந்தை-மகன் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய 3 டாக்டர்கள் குழு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Jun 2020 3:30 AM IST (Updated: 24 Jun 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் தாக்கியதில் இறந்ததாக கூறப்படும் தந்தை-மகன் உடல்களை 3 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த செல்வராணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை, 

எனது கணவர் ஜெயராஜ், சாத்தான்குளம் மார்க்கெட் பகுதியில் செல்போன் விற்பனை கடை நடத்தி வந்தார். கடந்த 19-ந்தேதி அன்று இரவு அந்த பகுதியில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேசன், ஏட்டு முருகன் ஆகியோர் ரோந்து வந்துள்ளனர்.

அப்போது என் கணவர் செல்போன் கடையில் இருந்துள்ளார். அங்கு வந்த போலீசார், என் கணவரை திடீரென கடையில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கினர். இந்த தகவல் அறிந்ததும் எனது மகன் பென்னிக்ஸ் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரித்துள்ளார். எனது மகனையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர் அவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைத்தனர். இருவரும் படுகாயங்களுடன் ஜெயிலில் இருந்த நேரத்தில் நேற்று முன்தினம் எனது மகன் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டார். எனது கணவர் நேற்று அதிகாலை திடீரென இறந்துள்ளார்.

இவர்கள் இருவரும் போலீசாரின் தாக்குதலின் காரணமாக பலியாகிவிட்டனர். இதற்கு முழு பொறுப்பும் போலீசார் தான். எனவே அவர்கள் மீது வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது கணவர் மற்றும் மகனின் உடலை 3 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை நடத்தவும், அதை வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி புகழேந்தி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தார். முடிவில், மனுதாரரின் கணவர் மற்றும் மகனின் உடல்களை 3 டாக்டர்களுக்கு குறையாத குழு பிரேத பரிசோதனை செய்யவும், அதை வீடியோ பதிவு செய்யவும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டீன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பரிசோதனை முடிவின் அடிப்படையில், உரிய விசாரணையை தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story