மொத்த விற்பனையாளரை நியமிக்க கூடாது: ஆவின் பால் முகவர்கள் காத்திருப்பு போராட்டம் - 12 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை பாதிக்கப்படும் என எச்சரிக்கை


மொத்த விற்பனையாளரை நியமிக்க கூடாது: ஆவின் பால் முகவர்கள் காத்திருப்பு போராட்டம் - 12 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை பாதிக்கப்படும் என எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2020 3:45 AM IST (Updated: 24 Jun 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

மொத்த விற்பனையாளரை நியமிக்கக்கூடாது என்று கோரி ஆவின் பால் முகவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோர், 12 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

ராணிப்பேட்டை,

வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த ஆவின் பால் முகவர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த ரத்தினகிரி, விஷாரம், திமிரி, அம்மூர், திருவலம், நரசிங்கபுரம், சிப்காட், பாரதிநகர், அக்ராவரம், லாலாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முகவர்கள் ராணிப்பேட்டை அலுவலகத்தில் பணம் செலுத்தி பால் வினியோகம் செய்து வருகின்றனர்.

தற்போது ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் நிறுவனம் புதிய பால் மொத்த விற்பனையாளரை நியமனம் செய்து வருவதாகத் தெரிகிறது. அதற்கு ஆவின் பால் முகவர்கள் நலச் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மொத்த விற்பனையாளரை நியமிக்கக் கூடாது எனச் சங்கத்தினர், மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆவின் வசூல் மையம் முன்பு ஆவின் பால் முகவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ஒருங்கிணைந்த ஆவின் பால் முகவர்கள் நலச் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர், பொருளாளர் செல்வம், ஆலோசகர் எல்.சி.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, சிப்காட், அம்மூர், லாலாப்பேட்டை உள்பட 65 இடங்களில் ஆவின் பாலை முகவர்களாகிய நாங்கள் சில்லரை விற்பனை செய்து வருகிறோம், இப்போது ஆவின் பாலுக்கு இப்பகுதிக்கு மொத்த விற்பனையாளர் ஒருவரை நியமிக்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அப்படி நியமிக்கப்பட்டால் ஆவின் பாலை விற்பனை செய்யும் முகவர்களும், ஆவின் பாலை வாங்கி உபயோகம் செய்யும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே மொத்த விற்பனையாளரை நியமிக்கக் கூடாது, பணம் கட்ட வந்த நாங்கள் பணத்தைக் கட்டாமல் இருக்கிறோம், மேலும் நாளை (இன்று புதன்கிழமை) 12 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை பாதிக்கப்படும், என எச்சரிக்கை விடுத்தனர்.

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆவின் பொது மேலாளர் கணேசா போராட்டம் நடத்திய ஆவின் முகவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தை முடிவில் மொத்த விற்பனையாளர் நியமிக்கப்படமாட்டாது. பழைய நிலையே தொடரும் என்று உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து முகவர்கள் காத்திருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு ஆவின் நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தினர். அதைத் தொடர்ந்து வழக்கம்போல் ஆவின் பால் வினியோகம் நடைபெறும் என முகவர்கள் தெரிவித்தனர்.

Next Story