கடலூர் கிளை சிறைச்சாலையில் உதவி சிறை அலுவலர், வார்டனுக்கு கொரோனா


கடலூர் கிளை சிறைச்சாலையில் உதவி சிறை அலுவலர், வார்டனுக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Jun 2020 3:30 AM IST (Updated: 24 Jun 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கிளை சிறைச்சாலையில் உதவி சிறை அலுவலர் மற்றும் வார்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பத்தில் கிளை சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 7 விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். உதவி சிறை அலுவலர் உள்பட 18 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் உதவி சிறை அலுவலர் மற்றும் ஒரு வார்டனுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே உதவி சிறை அலுவலர் மற்றும் வார்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சிறையில் இருந்த 7 கைதிகளுக்கும், மற்ற வார்டன்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உமிழ்நீர் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதன் முடிவு வந்த பிறகே சிறையில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.

இந்நிலையில் கிளை சிறையில் இருந்த கைதிகளும், வார்டன்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கிளை சிறைச்சாலை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Next Story