செவிலியர் உள்பட 19 பேருக்கு பாதிப்பு: கொரோனாவுக்கு மூதாட்டி பலி - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆனது
புதுவையில் செவிலியர் உள்பட 19 பேருக்கு தொற்று பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 402-ஐ தாண்டியது. கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் பலியானார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் முதல் 50 நாட்கள் வரை கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. ஒற்றை இலக்கத்திலேயே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்து வந்தது. 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் பதிவாகி வருகிறது.
இதனால் சுகாதார துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா பரவலை தடுக்க வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்றும் புதிதாக 19 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 8 பேர் கதிர்காமம் அரசு மருத்துவமனை, 6 பேர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரைக்காலில் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதுவையை சேர்ந்த ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலியார்பேட்டையை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சளி, காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார். இவரை சேர்த்து புதுவையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 402 ஆக உள்ளது. பலியான 9 பேரும் இதில் அடங்குவர். கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 12 பேர், ஜிப்மரில் 4 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த செவிலியருக்கு தொற்று பாதித்துள்ளது. அவருக்கு 2 முறை பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பதும், 3-வது நடத்திய சோதனையில் கொரோனா இருப்பதும் தெரியவந்தது.
காரைக்காலில் தொற்றுக்குள்ளான 4 பேரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். இதுவரை மொத்தம் 13,037 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 12,526 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 104 பேரின் பரிசோதனைகளின் முடிவுகள் வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story