ஈரோடு காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை - மாநகராட்சி சார்பில் நடந்தது


ஈரோடு காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை - மாநகராட்சி சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 24 Jun 2020 5:58 AM GMT (Updated: 24 Jun 2020 5:58 AM GMT)

ஈரோடு மாநகராட்சி சார்பில் காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

ஈரோடு, 


ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் இயங்கி வந்த நேதாஜி காய்கறி பழங்கள் சந்தை தற்காலிகமாக ஈரோடு பஸ்நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை விரைவில் வ.உ.சி.பூங்கா மைதானத்துக்கு மாற்றப்பட உள்ளது. இந்தநிலையில் நேற்று ஈரோடு காய்கறி பழங்கள் சந்தை வியாபாரிகளுக்கு ஈரோடு மாநகராட்சி மற்றும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம் சார்பில், கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு சங்க தலைவர் பி.பி.கே.பழனிச்சாமி தலைமை தாங்கினார். பொருளாளர் முருகுசேகர், செயலாளர் வைரவேல், அ.தி.மு.க. இளைஞர் -இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பி.பி.கே.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் முகாமை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி நகர்நல அதிகாரி ( பொறுப்பு), டாக்டர் அம்பிகா, டாக்டர் சிவதர்ஷினி ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனைக்கு தொண்டையில் இருந்து சளி மாதிரி சேகரித்தனர். நிகழ்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் முழுமையாக நடந்து வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாக பஸ்நிலையம் உள்ளது. இங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே வளையக்கார வீதி பகுதியில் முழுமையான பரிசோதனை செய்யப்பட்ட போது 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீதம் உள்ளவர்களுக்கு பஸ்நிலையத்தில் முகாம் நடத்தி பரிசோதனை செய்யப்பட்டது. விடுபட்ட வியாபாரிகள், பஸ் நிலைய ஆட்டோ டிரைவர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் என 265 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story