புதிதாக 49 பேர் பாதிப்பு: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு மேலும் 2 பெண்கள் பலி


புதிதாக 49 பேர் பாதிப்பு: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு மேலும் 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 25 Jun 2020 5:26 AM IST (Updated: 25 Jun 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு மேலும் 2 பெண்கள் பலியானார்கள். புதிதாக 49 பேர் பாதிக்கப்பட்டனர். நெல்லை, தென்காசியில் நர்சிங் மாணவி உள்பட மேலும் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு சங்கிலியை சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைவாக கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு வருவதால், அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த கொரோனா சங்கிலி தொடர்பை துண்டிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 732 ஆக உயர்ந்தது.

மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 15 பேருக்கும், திருச்செந்தூரில் 14 பேருக்கும், ஆழ்வார்திருநகரியில் 5 பேருக்கும், புதுக்கோட்டையில் 4 பேருக்கும், ஏரலில் 3 பேர் உள்பட மொத்தம் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மதியம் நிலவரப்படி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 195 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தனர்.

2 பெண்கள் பலி

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். இதில் ஒருவர் விருதுநகர் மாவட்டத்திலும், ஒருவர் நெல்லை மாவட்ட பட்டியலிலும் சேர்க்கப்பட்டார். அதே போன்று நெல்லையில் இறந்த ஒருவர், தூத்துக்குடி மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி அதிகாலையில் அணியாபரநல்லூரை சேர்ந்த 57 வயது பெண் காய்ச்சல், மூச்சுத்திணறலுடன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதே போன்று கோவில்பட்டியில் இருந்து காய்ச்சலுடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த 56 வயது பெண்ணும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து இறந்த 2 பெண்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. இதில் 2 பெண்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 25 பேர் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

மற்றவர்களில் நெல்லை மாநகரில் மேலப்பாளையம் மண்டலத்தை சேர்ந்த 3 பேரும், தச்சநல்லூர் மண்டலத்தை சேர்ந்த 2 பேரும், பாளையங்கோட்டை மண்டலத்தை சேர்ந்த 2 பேரும் ஆவார்கள். இதில் நர்சிங் மாணவி ஒருவருக்கும், பீடி கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஏற்கனவே, நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை 680 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஆலங்குளத்தை சேர்ந்த 2 பேரும், 3 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு வந்தவரும் ஆவார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆலங்குளத்தை சேர்ந்தவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் 272 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 277 ஆக உயர்ந்துள்ளது.

Next Story