கொரோனா ஊரடங்கு: நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் ரத்து


கொரோனா ஊரடங்கு: நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் ரத்து
x
தினத்தந்தி 25 Jun 2020 5:32 AM IST (Updated: 25 Jun 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊடங்கால் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெல்லை, 

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆனி திருவிழா மிகவும் புகழ் பெற்றது. இந்த திருவிழாவின் தேரோட்டத்தை பார்க்க சுற்று வட்டார மக்கள் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் நெல்லைக்கு வருவது வழக்கம்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆனித்திருவிழா நடத்த இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தபோது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் திருவிழாக்கள் உள் விழாவாக நடத்தப்பட்டது.

தேரோட்டம் ரத்து

அதேபோல் நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவுக்கு உள் திருவிழாவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவால் வழக்கமாக நடைபெறும் உற்சவர் வீதி உலாக்கள், தேரோட்டம் தடை செய்யப்பட்டாலும், ஆகம விதிப்படி இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை 10 நாட்கள் உள் பிரகார விழாக்கள் நடைபெற உள்ளன.

தினமும் காலை 10 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், உற்சவ மூர்த்திகள், திருமூல மகாலிங்கம், வேணுவனேஸ்வரர் ஆகியோருக்கு கும்பம் வைத்து ஜெபம் செய்யப்படுகிறது. மேலும் மாலையில் சிறப்பு அலங்காரம், சோடச தீபாராதனைகள் நடத்தப்படுகின்றன.

மேற்கண்ட தகவல்களை நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story