3 டாக்டர்களுக்கு கொரோனா: அரசு மருத்துவமனையில் மரத்தடியில் நோயாளிகளுக்கு சிகிச்சை
வந்தவாசி அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் புறநோயாளிகள் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டு மரத்தடியில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வந்தவாசி,
வந்தவாசி அரசு மருத்துவமனையில் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சிகிச்சை பெறுவது வழக்கம். இந்த நிலையில் மருத்துவமனையி்ல் பணிபுரியும் 2 பெண் டாக்டர்கள், ஒரு ஆண் டாக்டர் ஆகியோருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.
இதனால் நேற்று அரசு மருத்துவமனை முழுவதும் வந்தவாசி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன் பிளிச்சிங் பவுடர் போடப்பட்டது. பின்னர் புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவரச சிகிச்சை பிரிவு ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் மரத்தடியில் மருத்துவ அலுவலர் சிவப்பிரியா தலைமையில் மருத்துவ குழுவினர் புறநோயாளிகளை பரிசோதித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
சில மணி நேரத்திற்கு பின்னர் ஆண்கள் உள்நோயாளிகள் வார்டு பிரிவு கட்டிடத்தில் புறநோயாளிகளை பரிசோதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள், பணியாளர்கள் உள்பட 59 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story