திருப்பத்தூரில், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல்


திருப்பத்தூரில், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Jun 2020 10:30 PM GMT (Updated: 25 Jun 2020 2:52 AM GMT)

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை பணிகளுக்காக 2016ம் ஆண்டு ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அந்தப் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் குறித்து குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி பேசியதாவது:-

திருப்பத்தூரில் உள்ள 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட்டு இதுவரை முடிக்கப்படாமல் உள்ளது. அனைத்துப் பணிகளை முடித்து பாதாள சாக்கடை பணிகள் திட்டம் விரைவில் அமலுக்கு வர வேண்டும். திருப்பத்தூரில் உள்ள 15 ஆயிரம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழாய்களில் இணைப்புப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடத்த வேண்டும்.

ஜார்ஜ்பேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை விரைந்து முடித்துத் தர வேண்டும். இதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்ததாரர் வீட்டில் இருந்து வெளியேற்றும் கழிவுநீர் குழாய்களை பொருத்த எந்தக் கட்டணமும் பெறக்கூடாது. நெடுஞ்சாலையில் குழாய்கள் பதிக்கும் வேலைகள் உடனடியாக நடக்க வேண்டும்.

திருப்பத்தூரில் விடுபட்ட தெருக்களில் பாதாள சாக்கடை குழாய்கள் பொருத்தப்பட வேண்டும். அனைத்துப் பணிகளை விரைந்து முடித்து, பாதாள சாக்கடை திட்டம் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும்.

மேற்கண்டவாறு கலெக்டர் வலியுறுத்தி பேசினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story