திண்டுக்கல் மாவட்டத்தில், வெளியூர்களில் இருந்து வருவோரை கண்டறிய 48 சோதனை சாவடிகள்
வெளியூர்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு வருவோரை கண்டறிய 48 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் பிறமாவட்டங்களில் இருந்து, சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் நபர்களால் அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்கிறது. அவ்வாறு சென்னையில் இருந்து வருபவர்கள், அந்தந்த மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைத்து கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில், கொரோனா பாதிப்பு இல்லாத நபர்கள் மட்டுமே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று உறுதியானால், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். இதற்கு பயந்து சிலர் சோதனை சாவடிகள் வழியாக செல்லாமல், குறுகலான சாலை மற்றும் காட்டுப்பாதையில் உள்ள குக்கிராமங்கள் வழியாக ஊருக்கு சென்று விடுகின்றனர்.
அவ்வாறு செல்வோரை கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சி சாலை, கரூர் சாலை, பழைய கரூர் சாலை, தேனி சாலை, பழனி சாலை, மதுரை சாலை, நத்தம் சாலை ஆகிய 7 சாலைகளில் மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் உள்ளன.
மேலும் காட்டுப்பாதையில் வருவோரை கண்டறியும் வகையில் கூடுதலாக சோதனை சாவடிகளை அமைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் 29 சோதனை சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டன. இதன்மூலம் பிரதான சாலைகளில் வராமல் குக்கிராமங்கள் வழியாக காட்டுப்பாதைகளில் வருவோர் கண்டறியப்பட்டு, அவர்கள் பரிசோதனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை தொடர்ந்து மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து பரிசோதனை செய்வதற்காக சோதனை சாவடிகளை கூடுதலாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து லிங்கவாடி, கோட்டையூர், பொய்யம்பட்டி, கள்ளர்மடம், அணைப்பட்டி, நாகையகவுண்டன்பட்டி, கெங்குவார்பட்டி, செங்குறிச்சி உள்பட 12 இடங்களில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் சோதனை சாவடிகளில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் சோதனை சாவடிகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story