பல்கலைக்கழக ஊழியருக்கு கொரோனா - மக்கள் தொடர்பு அலுவலகம் மூடப்பட்டது


பல்கலைக்கழக ஊழியருக்கு கொரோனா - மக்கள் தொடர்பு அலுவலகம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 25 Jun 2020 12:50 PM IST (Updated: 25 Jun 2020 12:50 PM IST)
t-max-icont-min-icon

ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் புதுவை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகம் மூடப்பட்டது.

காலாப்பட்டு, 

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இருப்பினும் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் தொடர்பான அலுவலகங்கள் திறக்கப்பட்டு அன்றாட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பல்கலைக்கழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றும் திருச்சிற்றம்பலம் வசந்தம் நகரை சேர்ந்த 57 வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வேலை செய்த அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் அந்த அலுவலகம் மூடப்பட்டது.

பல்கலைக்கழக ஊழியரின் மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தந்தையும், மகனும் புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியருடன் அலுவலகத்தில் வேலை செய்த 3 ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று (வியாழக்கிழமை) தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Next Story