நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 26 Jun 2020 3:45 AM IST (Updated: 26 Jun 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 8 பேருக்கும், புறநகர் பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு இரும்பு கடையை சேர்ந்த 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் பாளையங்கோட்டையை அடுத்த ஆனையார்குளம் பகுதிக்கு வெளிநாட்டில் இருந்த வந்த ஒருவருக்கும், நெல்லை சந்திப்பு பகுதியில் இனிப்பு கடையில் வேலை செய்த ஒரு ஊழியருக்கும், நெல்லை சந்திப்பு உடையார்பட்டி சாலையில் உள்ள 40 வயது தொழிலாளி ஒருவருக்கும் தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்குள்ள தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தற்போது நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 689 ஆக உயர்ந்துள்ளது.


தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கீழப்பாவூரை சேர்ந்த 3 பேருக்கும், வாசுதேவநல்லூரை சேர்ந்த 4 பேருக்கும், குருவிகுளம், தென்காசி, சேர்ந்தமரம், கரிவலம்வந்தநல்லூர், ஆலங்குளம் ஆகிய பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 732 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி சிலுவைப்பட்டி, டூவிபுரம், பூபாலராயர்புரம், கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 756 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story