தூத்துக்குடியில் 3 போலீஸ்காரர்கள், கர்ப்பிணிக்கு கொரோனா
தூத்துக்குடியில் 3 போலீஸ் காரர்கள், கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் கோவில்பட்டியில் போக்குவரத்து போலீஸ்காரரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், கொரோனாவின் தாக்கம் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இங்கு பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக, மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த 85 பேர் தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டி சுனாமி பேரிடர் காத்திருக்கும் அறையில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இதில் 3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த 3 போலீஸ்காரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பட்டாலியனில் உள்ள மற்ற 82 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக சளி மாதிரி சேகரிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், அந்த போலீசார் எந்தெந்த பகுதிகளுக்கு சென்று வந்தனர் என்பது குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த ஆஸ்பத்திரியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கம் மூடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. டாக்டர், நர்சு உள்ளிட்ட சிலருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
மேலும் பழையகாயலில் உள்ள மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சவேரியார்புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. முள்ளக்காடு பகுதியிலும் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோன்று கோவில்பட்டியில் 33 வயதான போக்குவரத்து போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் கோவில்பட்டியைச் சேர்ந்த தொழில் அதிபரின் மனைவி உள்ளிட்ட 4 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து போலீஸ்காரர் வசித்த போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story