கடுமையான காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதி: கொரோனா பரிசோதனை முடிவுக்கு காத்திருந்தவர் பலி


கடுமையான காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதி: கொரோனா பரிசோதனை முடிவுக்கு காத்திருந்தவர் பலி
x
தினத்தந்தி 26 Jun 2020 4:45 AM IST (Updated: 26 Jun 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனை முடிவுக்கு காத்திருந்தவர், கடுமையான காய்ச்சல், மூச்சுத்திணறலால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் பரிதாபமாக இறந்தார்.

ஆவடி, 

திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரைச் சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல், தலைவலியால் அவதிப்பட்டார். முழுஊரடங் கால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாததால் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு போன் செய்தார்.

ஆனால் அவர்கள் யாரும் அவரை பரிசோதிப்பதற்காகவோ, அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கவோ முன்வரவில்லை என தெரிகிறது. பின்னர் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தை வரவழைத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்கள், கொரோனா தொற்று உறுதியானால்தான் உங்களை ஆஸ்பத்திரியில் சேர்க்க முடியும், பரிசோதனை முடிவு வரும்வரை வீட்டில் இருங்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு கடுமையான காய்ச்சலும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் மீண்டும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள், போலீசார் உள்ளிட்ட அனைவருக்கும் போன் செய்தும் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். அதன்பிறகு 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள், அவர் இறந்து விட்டதால் அவரது உடலை எடுத்துச் செல்ல முடியாது என்று கூறி சென்றுவிட்டனர்.

அதன்பிறகு அவரது உடலை நள்ளிரவில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனைக்கு பிறகு நேற்று காலை அவரது உடலை ஆவடிக்கு அனுப்பி வைத்தனர். ஆவடி மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் பருத்திப்பட்டு பகுதியில் உள்ள மின்மயானத்தில் அவரது உடலை எரியூட்டினர்.

கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருந்தவர், கொரோனா உறுதியா? என முடிவு தெரிவதற்குள் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ துறையினர் மெத்தனமாக செயல்பட்டதால் அவர் உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

Next Story