செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 191 பேர் கொரோனாவால் பாதிப்பு-5 பேர் பலி


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 191 பேர் கொரோனாவால் பாதிப்பு-5 பேர் பலி
x
தினத்தந்தி 25 Jun 2020 11:30 PM GMT (Updated: 25 Jun 2020 7:57 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 5 பேர் பலியானார்கள்.

வண்டலூர்,  

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் களிவந்தபட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 45 வயது பெண், கூடலூர் சி.எம்.டி.ஏ. பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர், காட்டாங்கொளத்தூர் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்த 47 வயது ஆண், நந்திவரம் கணபதி நகர் விரிவு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர், 69 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

ஊரப்பாக்கம் ரெயில்வே ஸ்டேஷன் தெருவில் வசிக்கும் 28 வயது பெண், அய்யஞ்சேரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, ஜே.சி. நகர் பகுதியை வசிக்கும் 30 வயது இளம்பெண், வண்டலூர் ஊராட்சி செந்தில் நகர், ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்த 76 வயது முதியவர், ரத்தினமங்கலம் தியாகராஜர் நகர், கஜலட்சுமி தெருவில் வசிக்கும் 60 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,407 ஆக உயர்ந்தது. இவர்களில் 2,355 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 60 வயது முதியவர்கள் 2 பேர், 50 வயது ஆண், 31 வயது இளம்பெண், 33 வயது வாலிபர் என 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் மேல் படப்பை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 39 வயது ஆண், ஆதனூர் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 41 வயது பெண், 21 வயது இளம்பெண், 16 வயது சிறுவன் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,488 ஆனது. இவர்களில் 679 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 பேர் பலியானார்கள்.

தீயணைப்பு படை வீரர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைபேர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த 35 வயது வாலிபர், கும்மிடிப்பூண்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது. அவர் தன்னை பணி செய்யும் இடத்திலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

மேலும் சோழவரம் ஒன்றியம் ஆரணி அத்திகுளம் தெருவைச் சேர்ந்த 62 வயது மூதாட்டிக்கு சர்க்கரை நோய் மற்றும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் அவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

இவர்களுடன் சேர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் 170 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1,874 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,160 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 51 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

Next Story