பெரம்பலூர் அருகே சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? போலீசார் விசாரணை


பெரம்பலூர் அருகே சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Jun 2020 10:36 PM GMT (Updated: 25 Jun 2020 10:36 PM GMT)

பெரம்பலூர் அருகே பிறந்து ஓரிரு நாட்களே ஆன பெண் குழந்தையை சாலையோரம் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கல் ஒட்டர் தெருவை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி பஞ்சவர்ணம்(வயது 26). இவர் நேற்று காலை தனது வளர்ப்பு நாயுடன் பெரம்பலூர்- எளம்பலூர் புறவழிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் பாலத்தின் அருகே ஒரு பை கிடந்தது. இதனை கண்ட நாய் அந்த பையை கவ்வி இழுத்தது. அப்போது அந்த பையில் இருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பஞ்சவர்ணம் உடனடியாக அந்த பையை எடுத்து பார்த்தார். அப்போது பையின் உள்ளே துணியால் சுற்றப்பட்டு பிறந்து ஓரிரு நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் தனது அண்ணன்கள் பெருமாள், ராஜீவ்காந்தி ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் உதவியுடன் அந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்தார்.

மருத்துவமனையில் ஒப்படைப்பு

பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது பஞ்சவர்ணம், அந்த குழந்தையை தனது அண்ணன் ராஜீவ்காந்தி குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படுவதாக போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் போலீசார், நாங்கள் இந்த பெண் குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனை தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைத்து விடுவோம். அதன்பிறகு நீங்கள் அந்த குழந்தையை அரசின் வழிமுறைகளை பின்பற்றி தத்தெடுத்து வளர்க்கலாம் என்று கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து குழந்தையை வாங்கி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பிறந்து ஓரிரு நாட்களில் பெண் குழந்தையை சாலையோரம் பாலத்தின் அருகே வீசிச்சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்?, அந்த குழந்தை தவறான உறவால் பிறந்ததா? என்பது குறித்து போலீசாரும், சுகாதாரத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story