செந்துறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பெரிய ஏரிக்கு வந்த மழைநீர் விவசாயிகள் மகிழ்ச்சி


செந்துறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பெரிய ஏரிக்கு வந்த மழைநீர் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 25 Jun 2020 10:53 PM GMT (Updated: 25 Jun 2020 10:53 PM GMT)

செந்துறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பெரிய ஏரிக்கு வந்த மழைநீரை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ளது பெரிய ஏரி. 190 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த ஏரி ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. அப்போது ஆய்வுக்கு வந்த முந்தைய அரியலூர் மாவட்ட கலெக்டர் வினய் ஏரியை தூர்வாரினால் மட்டும் தண்ணீர் வந்து விடாது. ஏரிக்கு வரும் நீர்வரத்து வாரிகளை முழுமையாக தூர்வாரினால் மட்டுமே தண்ணீர் வரும் என்றும் நீர்வரத்து வாரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று கூறினார்.

விவசாயிகள் மகிழ்ச்சி

முந்தைய அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், அதன் ஒரு பகுதியாக பெரிய ஏரியின் கிழக்கு பகுதியில் இருந்து வரும் நீர்வரத்து வாரிகளை சில இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீர் என இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் விவசாய பகுதிகளில் பெய்த மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வந்தது. அப்போது பெரிய ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலில் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு இருந்த பொக்லைன் எந்திரங்கள் வாய்க்காலில் திருத்தபட்டு இருந்தது. பெருக்கெடுத்து ஓடி வந்த மழைநீரில் பொக்லைன் எந்திரங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. இதனை கண்ட ஊழியர்கள் பெரும் போராட்டத்திற்கு இடையே பொக்லைன் எந்திரத்தை மீட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நீர் வழித்தடத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடி செந்துறை பெரிய ஏரிக்கு வந்ததை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று அனைத்து இடங்களிலும் உள்ள நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story