மராட்டியத்தில் 3 மாதத்துக்கு பிறகு சலூன் கடைகளை 28-ந் தேதி திறக்க அனுமதி -மந்திரி சபை கூட்டத்தில் முடிவு


மராட்டியத்தில் 3 மாதத்துக்கு பிறகு சலூன் கடைகளை 28-ந் தேதி திறக்க அனுமதி -மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 26 Jun 2020 4:24 AM IST (Updated: 26 Jun 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 3 மாதத்துக்கு பிறகு சலூன் கடைகளை வருகிற 28-ந்தேதி முதல் திறக்க அனுமதி அளித்து மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை, 

நாட்டிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மராட்டியத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடாக இல்லை. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவில் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 841 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 192 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே கொரோனாவால் கடும் வீழ்ச்சியை சந்தித்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக 'மிஷன் பிகின் அகேன்' என்ற திட்டத்தின் கீழ் மராட்டியத்தில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்படுகின்றன.

அதன்படி தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சலூன் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.


3 மாதமாக சலூன் கடைகள் மூடியே கிடப்பதால் முடி திருத்துவோரின் குடும்பத்தினர் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பொதுமக்கள் முடி திருத்தி கொள்ள முடியாமல் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களை கொண்டு ஒருவருக்கொருவர் முடிதிருத்தி கொள்கின்றனர்.

தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என சலூன்கடை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இல்லையெனில் மாநில அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து, கடந்த வாரம் சலூன் கடைக்காரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களின் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


இதுதொடர்பாக நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த மாநில மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வுத்துறை மந்திரி விஜய் வடேட்டிவார் வீடியோ செய்தி வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த அரசு வழிகாட்டுதல்களுடன் சலூன் கடைகளை மீண்டும் திறக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனுமதி அளித்து உள்ளார். இதன்படி மராட்டியத்தில் வருகிற 28-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

முடிதிருத்துபவர் மற்றும் வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி மற்றும் முககவசத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.ஒரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தப்படும் துணி மற்றும் துண்டு மற்றவர்களுக்கு பயன்படுத்தக் கூடாது. ஊரடங்கு காரணமாக வேலையிழந்து வருமானத்தை இழந்ததால் 3 மாதங்களில் 12 முடிதிருத்தும் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த பிரச்சினையை மந்திரிசபை கூட்டத்தில் எழுப்பினேன். இதை தொடர்ந்து நிபந்தனைகளுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.

இந்தநிலையில் விரைவில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்படும் என மந்திரி அஸ்லம் ஷேக் தெரிவித்துள்ளார். சலூன் கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டுதல்கள் அடுத்த 2 நாட்களில் பிறப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story