பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு இல்லை- எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தப்போவது இல்லை என்று எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. இதனால், கே.ஆர்.மார்க்கெட், கலாசிபாளையா உள்ளிட்ட மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன. தர்மராயசாமி கோவில், சாம்ராஜ்பேட்டை, சிக்பேட்டை உள்ளிட்ட வார்டுகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், இதுகுறித்து 25-ந் தேதி(அதாவது நேற்று) எடியூரப்பா தலைமையில் நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி நேற்று எடியூரப்பா தலைமையில் விதான சவுதாவில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெங்களூருவில் எக்காரணம் கொண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“பெங்களூருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானால், 6 முதல் 7 மணி நேரத்திற்குள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர கூடுதலாக 100 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ கல்லூரிகளில் 10 ஆயிரம் படுக்கைகள் இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளன.
அந்த கல்லூரிகளுடன் பேசி, அதில் 5,000 படுக்கைகளை அரசு தன்வசம் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். சில மருத்துவ கல்லூரிகள் படுக்கைகளை வழங்கிவிட்டன. கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 61 சதவீதம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகத்தில் தற்போது 3,700 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெங்களூருவில் 6 வார்டுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளை மட்டும் முடக்கியுள்ளோம். பெங்களூருவில் எக்காரணம் கொண்டும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை.”இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
Related Tags :
Next Story