இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டதால் குளித்தலை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு


இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டதால் குளித்தலை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 5:53 AM IST (Updated: 26 Jun 2020 5:53 AM IST)
t-max-icont-min-icon

இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், குளித்தலை பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

குளித்தலை,

தமிழகத்தில், கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே செல்கிறது. இதனால் கொரோனா பரவுவதன் தீவிரத்தை தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு வாகனங்களில் செல்ல இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இது நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

போலீசார் கண்காணிப்பு

இதையடுத்து சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வாகனங்களில் வருவோர் இ-பாஸ் வைத்துள்ளனரா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குளித்தலை அருகே உள்ள மருதூர் சோதனை சாவடி, சுங்ககேட்டில் முசிறி செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் போலீசார், சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் குறித்து வைக்கப்படுகிறது. இ-பாஸ் இல்லாமல் வருவோரை போலீசார் திருப்பி அனுப்பி விடுகின்றனர். 

Next Story