எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகிறார் கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பு


எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகிறார் கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 6:04 AM IST (Updated: 26 Jun 2020 6:04 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகிறார். அவர், கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

திருச்சி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) சேலத்தில் இருந்து புறப்பட்டு கார் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அவர், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். ஆய்வு கூட்டம் முடிந்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார். அதன்பின்னர் சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். மதிய உணவிற்கு பின்னர் பிற்பகல் 2.30 மணி அளவில் முக்கொம்பிற்கு சென்று அங்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.385 கோடியில் நடந்து வரும் புதிய கதவணை கட்டுமான பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் சேலத்திற்கு செல்கிறார்.

தனி மேடை

முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் பல்வேறு பணிகள் நடந்தது. ஆய்வு கூட்டம் நடைபெற உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் தனி மேடை, கூடுதல் மின் விளக்குகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. தரைப்பகுதி முழுவதும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது.

நூலக கட்டிடம்

பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் இடத்திலும் பொதுப்பணித்துறை சார்பில் தனி மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன நூலக கட்டிடம் உள்பட சில கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

ஆய்வு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், சந்திரசேகர்ஆகியோரும், மாவட்ட கலெக்டர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை நடத்தி முடித்து உள்ளனர். ஆய்வு கூட்டம் நடக்கும் அரங்கில் அ.தி.மு.க. கட்சி பிரமுகர்கள், முன்னாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் முதல்-அமைச்சரை சுற்றுலா மாளிகையில் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Next Story