கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் விவகாரம்: முதல்-அமைச்சர் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பார்


கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் விவகாரம்: முதல்-அமைச்சர் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பார்
x
தினத்தந்தி 26 Jun 2020 12:49 AM GMT (Updated: 26 Jun 2020 12:49 AM GMT)

கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியுடன் இணைப்பது குறித்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்வார் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

கூட்டத்திற்கு அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். முன்னதாக ஊரக மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த வழிமுறை கையேட்டினை அமைச்சர் வெளியிட அதை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜமூர்த்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

76 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மேலும் ஊரடங்கு அறிவித்த பின்னர் தமிழக முதல்-அமைச்சர் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அவரவர் வீடுகளுக்கு சென்று பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 76 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்திலும் ரூ.1,000 பணம் வழங்கப்பட உள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்ப நிலையில் 32 பேர் பாதித்த நிலையில் தொடர் சிகிச்சையில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த நிலையில் மீண்டும் பிற மாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களால் கொரோனா தொற்று கூடுதலாக உயர்ந்துள்ளது.

விலையில்லா பொருட்கள்

மாவட்ட எல்லைகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யாமல் வெளி மாவட்ட, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் எவரையும் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் ஜூன் மாதத்திற்கு இதுவரை 88 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

தீர்க்கமான நடவடிக்கை

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூன்றடுக்கு முறையில் செயல்படுகிறது. அதனை அதே வழியில் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர், 2 மாதங்களுக்கு முன்பே மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கிகளுடன் இணைப்பது குறித்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்வார்.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா வைரஸ் நிவாரணமாக ரூ.1,000 வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 873 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 97 லட்சத்து 53 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களுக்கு செய்யும் துரோகம்

கொரோனா நடவடிக்கை குறித்து தமிழக அரசை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழக அரசு மீது யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டை வைக்கலாம். வேலை பார்ப்பவர்களுக்குத்தான் வேலையின் கஷ்டம் தெரியும். இந்த நேரத்தில் குற்றச்சாட்டு வைப்பது தவறான செயல் என்பதுடன், மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என்றார். 

Next Story