காலாப்பட்டு சிறையில் மேலும் 3 பேருக்கு கொரோனா ஜாமீனில் விடுவிக்கக் கோரி கைதிகள் திடீர் போராட்டம்


காலாப்பட்டு சிறையில் மேலும் 3 பேருக்கு கொரோனா ஜாமீனில் விடுவிக்கக் கோரி கைதிகள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2020 1:57 AM GMT (Updated: 26 Jun 2020 1:57 AM GMT)

காலாப்பட்டு மத்திய சிறையில் மேலும் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி கைதிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காலாப்பட்டு,

புதுவை மாநிலம் காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 750 பேர் உள்ளனர். இந்தநிலையில் தற்போது திருட்டு, குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்யும் போது அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள்.

இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக அடைக்கப்பட்ட கைதிகள் மூலம் காலாப்பட்டு சிறையில் கொரோனா பரவியது. தொற்றால் பாதிக்கப்பட்ட 2 கைதிகளுக்கு புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இவர்களுடன் தங்கி இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 3 பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திடீர் போராட்டம்

சிறையில் கொரோனா பரவியதை அறிந்து மற்ற கைதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேதராப்பட்டு குறளரசன், காலாப்பட்டு சுமன் ஆகியோர் ஜன்னல் வழியாக ஏறி கைதிகள் அறையின் மேற்கூரை மீது நின்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் கொரோனா பரவி வருவதால், கைதிகளை ஜாமீனில் வெளியே விடவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்து சிறை கண்காணிப்பாளர் கோபிநாத், தாசில்தார் குமரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், கார்த்திகேயன், ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பாதுகாப்புக்காக தீயணைப்பு நிலைய வீரர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர். கைதிகள் அறை மேற்கூரை மீது நின்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி அவர்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

எலும்பு முறிந்தது

இதை ஏற்று சுமன் முதலில் கீழே இறங்கி வந்தார். அடுத்து இறங்கிய குறளரசன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story