தமிழகத்தில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


தமிழகத்தில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

தமிழகத்தில் ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட திருவாச்சி ஊராட்சி சோளிபாளையம் பகுதியில் நடந்த விழாவில் தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் அந்த பகுதியில் நடைபெறும் அத்திக்கடவு -அவினாசி திட்ட நீர்த்தேக்க பணிகளை கள ஆய்வு செய்தார். பின்னர், அவர் விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அத்திக்கடவு -அவினாசி திட்டம் 3 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் சிறப்பு வாய்ந்த திட்டமாகும். 50 ஆண்டு காலமாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வந்த கனவு திட்டமாகும். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கின்ற போதே இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். அவருக்கு பின் ஜெயலலிதாவின் அரசு ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.

970 குளங்கள்

இந்த நிதி முற்றிலும் மாநில நிதியாகும். சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தை வருகிற 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு, மிகவும் துரிதமாகவும், வேகமாகவும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக 6 நீரேற்று மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 5 பணிகள் தொடங்கி விட்டன. ஒன்று விரைவில் தொடங்கும். குறித்த நேரத்தில் விவசாயிகளுக்காக இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.

இந்த திட்டத்தின் மூலம் 24 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றியப்பகுதி ஏரிகள், 970 குளங்கள் இந்த திட்டத்தின் மூலம் நீர்நிரப்பப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். குடிநீருக்கும், விவசாயத்துக்கும் இந்த நீர் பயன்படும். இந்த பணிகளை எல்லாம் மிகவும் துரிதமாக ஜெயலலிதாவின் அரசு மேற்கொண்டு வருகிறது.

ரூ.1000 கோடியில்தடுப்பணைகள்

விவசாயிகளுக்கு பாதுகாப்பான பல திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. 3 ஆண்டுகால திட்டமாக, பருவமழை காலத்தில் பெய்யும் மழை நீரை ஆங்காங்கே சேமிக்கும் வகையில் ரூ.1,000 கோடி செலவில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பவானி ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. பவானி அருகே ஜம்பை பகுதியில் ஒரு தடுப்பணை கட்டப்பட உள்ளது. மழைக்காலத்தில் ஆறுகளில் செல்லும் உபரிநீரை வீணாக்காமல் ஆறுகளில் தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர்த்த திட்டங்கள் போடப்பட்டு உள்ளன.

கால்நடை பூங்கா

குடிமராமத்து என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. தற்போது தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை நீர்நிலைகள் ரூ.1,413 கோடி செலவில் தூர்வார நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். இந்த ஏரிகளை டெண்டர் விடாமல், அந்தந்த பாசன விவசாயிகளே தூர்வார ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏரி, குளங்களில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய நிலங்களுக்கு இயற்கை உரமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வண்டல் மண் கிடைக்கிறது. ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு நீர் அதிக அளவில் தேங்குகிறது.

விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்புக்கு இந்த அரசு மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக தலைவாசல் பகுதியில் ரூ.1,000 கோடி செலவில் கால்நடை பூங்கா தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மற்றும் கால்நடை பூங்காவாக இது அமையும். சாதாரணமாக ஒரு பசுமாடு தினசரி 10 லிட்டர் பால் கறக்கிறது என்றால், இங்கு 25 லிட்டர் கறவை செய்யும் பசுமாடுகளை கலப்பின மாடுகளாக உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க ஆராய்ச்சிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த மாடுகள் நமது மண்ணின் பருவநிலைக்கு ஏற்றதாக உருவாக்கப்படும்.

இழப்பீடு

தமிழக விவசாயிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை சந்தைப்படுத்த தமிழகத்தில் 10 மாவட்டங்களில் தலா ரூ.20 கோடி செலவில் சந்தை தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ளும். விவசாயிகளுக்கு வேளாண்மை பணிகளுக்காக வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் டிராக்டர்கள் மானிய திட்டத்தில் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தொல்லையை கட்டுப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த முறை மக்காச்சோளம் சாகுபடியில் அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.186 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் அமெரிக்கன் படைப்புழு தாக்கம் விரைவாக கண்டறியப்பட்டு ரூ.49 கோடி செலவில் மருந்துகள் தெளித்து தாக்கத்தை கட்டுப்படுத்தி இருக்கிறோம். இதனால் 95 சதவீதம் விவசாயிகள் சிறந்த அறுவடையை பெற்று உள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம்

டெல்டா பகுதியில் நெல் விவசாயிகள் புகையான் தாக்குதலால் பாதிப்பு அடைந்தனர். இது அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், இழப்பீடு வழங்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு டெல்டா பகுதிகளில் இருந்து அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அதிகஅளவில் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்து உள்ளது.

வழக்கமாக அதிக பட்சமாக 23 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 லட்சம் டன் நெல் கொள்முதல் வரலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இவ்வாறு 27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைக்க இருக்கிறோம். சரியான நேரத்துக்கு தண்ணீர் திறப்பு, இடுபொருட்கள் வழங்கியது. கடைமடை பகுதிக்கும் தடை இல்லாத தண்ணீர் வழங்கியது போன்ற அரசின் நடவடிக்கைகளால் விவசாயிகள் உற்பத்தியை அதிகரித்து இருக்கிறார்கள்.

குடிமராமத்து பணிகள் முழுமையாக நடந்த காரணத்தால் மட்டுமே கடை மடைக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் சென்று சேர்ந்தது. இதனால் நல்ல விளைச்சல் கிடைத்து உள்ளது. ஏற்கனவே டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது ஜெயலலிதாவின் இந்த அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story