உடுமலை அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா மதுரைக்கு சென்று திரும்பியவர்


உடுமலை அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா மதுரைக்கு சென்று திரும்பியவர்
x
தினத்தந்தி 26 Jun 2020 2:45 AM GMT (Updated: 26 Jun 2020 2:45 AM GMT)

உடுமலையில் இருந்து மதுரைக்கு சென்று திரும்பிய உடுமலை அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது வீடு உள்ள பகுதி தடுப்புகள் வைத்து அடைத்து தனிமைபடுத்தப்பட்டுள்ளது.

உடுமலை,

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. இந்த தொற்று இப்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடூர வைரஸ் தொற்று சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் அதிகரித்ததைத்தொடர்ந்து அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி பல்வேறு மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

இந்தநிலையில் மின்னல் வேகம் எடுத்துள்ள இந்தவைரஸ் மதுரையில் அதிகம் பரவியதைத்தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத்தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

நர்சுக்கு கொரோனா

இந்த நிலையில் உடுமலை பஷீர் அகமது லேஅவுட் குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த 52 வயதுள்ள உடுமலை அரசுமருத்துவ மனை நர்சு, உடல்நலமில்லாமலிருந்த தனது தம்பியை பார்ப்பதற்காக கடந்த 16ம்தேதி மதுரைக்கு சென்று விட்டு, உடுமலைக்கு திரும்பி வந்தார். அதன்பின்னர் அவருக்கு 21 ம்தேதி காய்ச்சல் இருந்ததாகக்கூறப்படுகிறது. அதனால்கடந்த 23ம்தேதி சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவை இ.எஸ்.ஐ.அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிருமி நாசினி

இதைத்தொடர்ந்து உடுமலை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.கவுதம் தலைமையில் செவிலியர்கள், நகராட்சி நகர்நல அலுவலர்(பொறுப்பு)ஆர்.செல்வம் மற்றும் சுகாதார ஆய்வாளர் எஸ்.ஆறுமுகம், துப்புரவுப்பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பஷீர்அகமது லேஅவுட் குடியிருப்பு பகுதிக்கு சென்று அந்த பகுதியின் இரண்டு நுழைவுவாயில் பகுதிகளிலும் தடுப்புகளை வைத்து அடைத்து அந்த பகுதியில் உள்ள 74வீடுகளையும் தனிமைபடுத்தினர்.

அந்த நர்சு குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ள 4வீடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது.

Next Story