ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எல்லைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எல்லைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 26 Jun 2020 12:04 PM IST (Updated: 26 Jun 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எல்லைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின. மேலும் இ-பாஸ் இன்றி வந்த கார்கள், மோட்டார்சைக்கிள்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வேறு சில மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததும், அங்கு வசித்தவர்கள் வெளியேறி தங்களுடைய சொந்த ஊருக்கு வந்ததால் தான் பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மண்டலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கம் மற்றும் மோட்டார்சைக்கிள்கள், கார்கள் ஆகியவை இ-பாஸ் இன்றி செல்ல அனுமதி அளித்தது முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

திருப்பி அனுப்பினர்

இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் நேற்று முதல் வருகிற 30-ந்தேதி வரை மாவட்ட எல்லைக்குள் மட்டுமே பஸ்கள் இயக்க முடிவு எடுக்கப்பட்டது. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் காட்டாயம் என்றும் அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து வேலூர்-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தீவிர வாகனக் காண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பாஸ் இல்லாமல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து வேலூரை நோக்கி வந்த 150-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

விவரங்கள் சேகரிப்பு

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் அவர்களின் அடையாள அட்டையை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தனியார் நிறுவன ஊழியர்களை 30-ந்தேதி வரை அலுவலகத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டும். தினமும் சென்று வர அனுமதி கிடையாது எனப் போலீசார் தெரிவித்தனர்.

மாவட்ட எல்லைகள் மூடல், இ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி போன்றவற்றால் பிற மாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வரும் கார்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டன.

இ-பாசின் உண்மை தன்மையை சோதனைச் செய்து வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இரு சக்கர வாகனங்களில் வேலூர் மாவட்டத்துக்கு வந்த அனைவரின் பெயர், முகவரி, செல்போன் எண்கள், வேலை பார்க்கும் இடம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

வெறிச்சோடி காணப்பட்டது

வேலூரில் இருந்து டவுன் பஸ்கள் பெருமுகை வரை இயக்கப்பட்டன. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் செல்லும் மக்கள் ஆட்டோ மற்றும் நடந்து வந்து சோதனைச் சாவடியை கடந்து சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து நடந்து வந்தவர்களின் முகவரி சேகரிக்கப்பட்டது.

அதேபோல் திருவண்ணாமலை-வேலூர் மாவட்ட எல்லையான வல்லம், திருப்பத்தூர்-வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர் அருகே, தமிழக-ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை ஆகிய சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டலங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பயணம் செய்ய அனுமதித்ததால் பிள்ளையார்குப்பம் சோதனைச் சாவடியில் கடந்தசில நாட்களாக கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஆனால் நேற்று வாகனங்கள் எதுவும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பத்தூர் எல்லைகள் மூடல்

இதேபோல திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளான சின்னகந்திலி, பேராம்பட்டு, சுந்தரம்பள்ளி, தோரணம்பதி, மாதனூர், கொத்தூர் ஆகிய பகுதியில் ஊராட்சிகள் இயக்குனர் அருண் மேற்பார்வையில் தடுப்புகள் அமைத்து எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு, 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது:-

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சின்னகந்திலி, திருப்பத்தூர்-தர்மபுரி மாவட்ட எல்லையான சுந்தரம்பள்ளி, திருப்பத்தூர்-திருவண்ணாமலை மாவட்ட எல்லையான பேராம்பட்டு, திருப்பத்தூர்-வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர், தமிழகத்தில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திரா செல்லும் சாலையில் மாநில எல்லையான கொத்தூர் காந்திநகர் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து மாவட்ட, மாநில எல்லையை விட்டு யாரும் செல்லாமலும், அங்கிருந்து யாரும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வராமலும் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் 24 மணி நேரமும் அந்தப் பணியில் ஈடுபடுவார்கள். இது மட்டுமின்றி தொட்டிக்கிணறு, வெலந்திகாமணி பென்டா, ஜோலார்பேட்டை ரெயில் நிலையம், வாணியம்பாடி ரெயில் நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 30-ந்தேதி வரை இந்தப் பணியில் போலீசார் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story