நெல்லை, அம்பையில் இஸ்ரோ ஊழியர், 2 நர்சுகளுக்கு கொரோனா


நெல்லை, அம்பையில் இஸ்ரோ ஊழியர், 2 நர்சுகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jun 2020 5:45 AM IST (Updated: 27 Jun 2020 12:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, அம்பையில் இஸ்ரோ ஊழியர் மற்றும் 2 நர்சுகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பேட்டை, 

நெல்லை மாநகரில் பேட்டை பகுதியில் கடந்த 1 வாரமாக கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. அங்குள்ள கோடீசுவரன் நகர், பழையபேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த பரவல் ஏற்பட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு லாரி அதிபரும், நேற்று முன்தினம் 60 வயது மூதாட்டியும் கொரோனாவுக்கு பலியானார்கள்.

இந்த நிலையில் கோடீசுவரன் நகரை சேர்ந்த ஒருவர் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 37 வயதான அவருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டார்.

இதுதவிர இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பேட்டையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரிடம் பணிபுரிந்து வரும் 26 வயது நர்சுக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவரும் சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அம்பை அரசு ஆஸ்பத்திரியில் தாய்-சேய் நல பிரிவில் 39 வயது நர்ஸ் பணியாற்றி வருகிறார். அவர் பாளையங்கோட்டையில் இருந்து தினமும் பணிக்கு வந்து சென்றார். 

இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அம்பை அரசு ஆஸ்பத்திரியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம் தலைமையில் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் மூலம் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர்.

கடையநல்லூரை சேர்ந்த ஒருவர் மதுரையில் இருந்து கடையநல்லூருக்கு வந்திருந்தார். அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது அவருக்கும், அவருடைய மாமனாருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் வசிக்கும் தெரு அடைக்கப்பட்டது. அந்த பகுதியினருக்கு தேவையான உதவிகளை செய்ய தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அவர் மருந்து வாங்க சென்று வந்த கடை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 

இந்த பணியை நகராட்சி ஆணையாளர் குமார் சிங், சுகாதார அலுவலர் நாராயணன், கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, சேகர் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மேற்கொண்டனர். மேலும் சுகாதார பணியாளர்கள் மூலம் அந்த பகுதியில் யாருக்காவது சளி, காய்ச்சல் உள்ளதா? என கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story