சிறையில் தந்தை-மகன் சாவு: திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு


சிறையில் தந்தை-மகன் சாவு: திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 11:40 PM GMT (Updated: 26 Jun 2020 11:40 PM GMT)

சிறையில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

நன்னிலம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபாரிகளான தந்தை-மகன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்று சிறையில் அடைக்கப்பட்டபோது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, ராமசாமி, ஒன்றிய செயலாளர் இடும்பையன், நகர செயலாளர் பாலசுப்பிரமணியன்உளபட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நன்னிலம், பேரளம், பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. திருமக்கோட்டை பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

கொரடாச்சேரி

கொரடாச்சேரி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கொரடாச்சேரி பேரூராட்சி பகுதியில் உள்ள 300 கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் அம்மையப்பனில் 75 கடைகளும், காப்பணாமங்கலத்தில் 50 கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்

சிறையில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள், மாதர் சங்க மாவட்ட தலைவர் சுமதி, நகர செயலாளர் ஜோசப், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பால் சங்க மாவட்ட தலைவர் ரெத்தினம், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் கிஷோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

இதேபோல் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ரகுராமன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பாண்டியன், சாமிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மன்னார்குடி

மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் சந்திரா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மன்னார்குடி பெரிய கடைத்தெருவில் கடைகள் அடைக்கப்பட்டன. 

Next Story