சிறையில் தந்தை-மகன் சாவு: நாகை மாவட்டத்தில் கடையடைப்பு


சிறையில் தந்தை-மகன் சாவு: நாகை மாவட்டத்தில் கடையடைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 11:47 PM GMT (Updated: 26 Jun 2020 11:47 PM GMT)

சிறையில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நாகை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

சீர்காழி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபாரிகளான தந்தை-மகன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்று சிறையில் அடைக்கப்பட்டபோது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து சீர்காழியில் நேற்று வர்த்தக சங்கம், வர்த்தக நல சங்கம், அனைத்து வணிகர் நல சங்கம், சீர்காழி புதிய பஸ் நிலைய வர்த்தக சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி சீர்காழி தென்பாதி, பழைய பஸ் நிலையம் புதிய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு, சிதம்பரம் சாலை, ஈசானிய தெரு ரெயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் மேலவீதியில் நகர வர்த்தக சங்கம், நகர வணிகர் சங்கம் ஆகியன சார்பில் சாத்தான்குளத்தில் இறந்துபோன தந்தை, மகனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான வர்த்தகர்கள் கலந்து கொண்டு அவர்களின் படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் நகர வர்த்தக சங்கம், நகர வணிகர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள 400-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. கொள்ளிடம், புத்தூர், திருமுல்லைவாசலில் ஆகிய பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

செம்பனார்கோவில், பொறையாறு

செம்பனார்கோவில், பரசலூர், பொறையாறு ஆகிய பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் முக்கிய கடைவீதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. செம்பனார்கோவில் கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட உயிரிழந்த வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் படங்களுக்கு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பரசலூர் கிளை தலைவர் பாலு தலைமையில் வர்த்தகர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பேரமைப்பு மாவட்ட செயலாளர் நவநீதன், பொருளாளர் ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மணல்மேட்டிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் கடைவீதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது.

திருக்குவளை, குத்தாலம்

இதேபோல் குத்தாலத்திலும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி நகரில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் குத்தாலத்தின் அனைத்து வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருக்குவளை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, விவசாய சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story