தந்தை-மகன் இறந்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் கே.எஸ்.அழகிரி பேட்டி


தந்தை-மகன் இறந்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2020 7:44 AM IST (Updated: 27 Jun 2020 7:44 AM IST)
t-max-icont-min-icon

தந்தை-மகன் இறந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.

புவனகிரி,

லடாக் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் சீன ராணுவ வீரர்கள் தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விசாரணை

சீன வீரர்களின் ஊடுருவலை இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே தவறான செயல் என கூறுகிறது. அதனால் சீன பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும். ராணுவ வீரர்கள் 20 பேர் இந்திய எல்லையில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் எந்த ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது பற்றி தெரியவில்லை. இந்தியர்களும் சீன எல்லையில் ஊடுருவவில்லை. சீனர்களும் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என சொல்கிறார்கள். அப்படியானால் ராணுவ வீரர்கள் இறந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்த சம்பவத்தை பொறுத்தவரை, தற்போது கூறப்படும் தகவல்கள் தவறானவை. அதனால் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கடலூர்

இதேபோல் கடலூர் காமராஜர் சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர், வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதற்கு நகர தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ரங்கமணி, வட்டார தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் கலந்து கொண்டார்.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கிஷோர்குமார், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கடலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதற்கு நகர செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சாந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர துணை தலைவர் மாரிமுத்து, இளைஞர் காங்கிரஸ் ஆனந்த், சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story