தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 Jun 2020 7:56 AM IST (Updated: 27 Jun 2020 7:56 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் தடுப்பு வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வில்லியனூர்,

புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஜிப்மர் மருத்துவமனை, இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டு அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகம் முன்வந்து, மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கிராம மக்கள் போராட்டம்

இதனையறிந்த சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை மறித்து தடுப்பு வேலியை அமைத்தனர். கொரோனா வார்டு அமைத்தால் தங்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படும். எனவே கொரோனா நோயாளிகளை இங்கு கொண்டு வரக்கூடாது என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த தடுப்பு வேலியை அதிரடியாக அகற்றினர். பின்னர் பொதுமக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்துபோக செய்தார்.

Next Story