ஊரடங்கு உத்தரவை மீறிய ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை


ஊரடங்கு உத்தரவை மீறிய ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை
x
தினத்தந்தி 27 Jun 2020 2:37 AM GMT (Updated: 27 Jun 2020 2:37 AM GMT)

ஊரடங்கு உத்தரவை மீறிய ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை.

தேனி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தேனியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய மருத்துவ தேவைக்கு மட்டுமே ஆட்டோக்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நேற்று பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து தேனி நகர் மதுரை சாலையில் பகவதியம்மன் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் உள்ள போலீஸ் உதவி மையம் முன்பு விதியை மீறி இயக்கிய ஆட்டோக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அந்த ஆட்டோக்களை சாலையோரம் நிறுத்தி வைத்தனர். விதியை மீறி ஆட்டோவை இயக்கிய டிரைவர்களுக்கு நூதன தண்டனை வழங்கும் வகையில், 1 மணி நேரம் அங்கேயே சமூக இடைவெளியுடன் காத்திருக்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இடைப்பட்ட நேரத்தில் அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா பரவும் விதம், விதியை மீறி ஆட்டோவை இயக்கினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை கூறி போலீசார் அறிவுரை வழங்கினர். முதற்கட்டமாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி வரும் நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி ஆட்டோக்கள் இயங்கினால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story