சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு


சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு
x
தினத்தந்தி 27 Jun 2020 2:45 AM GMT (Updated: 27 Jun 2020 2:45 AM GMT)

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து வியாபாரி-மகன் சாவுக்கு காரணமாக போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போலீசாரை கண்டித்தும் வணிகர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட தொழில் வர்த்தகர்கள் சங்கம், திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் உள்பட அனைத்து வர்த்தகர்கள் சங்கங்களும் இணைந்து போராட்டத்தை அறிவித்தன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை, கோபால்பட்டி, வேடசந்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மளிகை கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள், செல்போன் கடைகள், செருப்பு கடைகள், மருந்து கடைகள் உள்பட அனைத்து வகையான கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.

அஞ்சலி

இதனால் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பலகோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் கடைகள் அடைக்கப்பட்டதால் திண்டுக்கல் மெயின்ரோடு, கடைவீதி, ரதவீதிகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெகுவாக வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன. அதேநேரம் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மருந்து கடைகள் மதியத்துக்கு பின்னர் திறக்கப்பட்டன.

இதற்கிடையே மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் சாத்தான்குளம் வியாபாரி-மகன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடந்தது. அப்போது மெழுகுவர்த்தி ஏற்றியும், 2 பேரின் உருவ படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story