கூடலூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்


கூடலூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Jun 2020 8:26 AM IST (Updated: 27 Jun 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே நடுரோட்டில் சரக்கு வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்டது கிளன்வன்ஸ் பகுதி. இங்கிருந்து பெண்கள் உள்பட 17 தொழிலாளர்கள் வேலைக்காக பெரியசோலையில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்துக்கு நேற்று காலை 8 மணிக்கு சரக்கு வேனில் புறப்பட்டனர். சரக்கு வேனை டிரைவர் ஜெம்ஷீர் என்பவர் ஓட்டினார். சீபுரம் பகுதியில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை சரக்கு வேன் இழந்தது. தொடர்ந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ஜெம்ஷீர், கிளன்வன்ஸ் பகுதியை சேர்ந்த செல்வகுமாரி(வயது 52), ராஜேஸ்வரி(58), கற்பகவள்ளி(26), செல்வராணி(45), கோகிலா(35), புஷ்பராணி(47), பத்மாவதி(38), பிள்ளையன்(58), குமாரி(37), கீதா(49), சுனிதா(27), ஜெயலட்சுமி, காளியம்மாள் ஆகிய 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

தீவிர சிகிச்சை

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு, கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் மேல் சிகிச்சைக்காக சுனிதா, காளியம்மாள் ஆகியோர் கேரள மாநிலம் மேப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்சிங் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஊரடங்கை மீறி தொழிலாளர்களை சரக்கு வேனில் அழைத்து வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நியூகோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஊரடங்கை மீறி தொழிலாளர்களை லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் அழைத்து சென்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Next Story