சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து கடையடைப்பு: நீலகிரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின


சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து கடையடைப்பு: நீலகிரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 27 Jun 2020 8:29 AM IST (Updated: 27 Jun 2020 8:29 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நடந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின. மேலும் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊட்டி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்தது.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஊட்டியில் கமர்சியல் சாலை, லோயர் பஜார், சேரிங்கிராஸ், ஏ.டி.சி., மெயின் பஜார், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தது. இதனால் நுழைவாயில்களுக்கு பூட்டு போடப்பட்டது.

கடைகளுக்கு முன்பு கடையடைப்பு போராட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் சாத்தான்குளம் சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. மார்க்கெட்டின் ஒரு பகுதியில் மட்டும் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கூடலூரில் மருந்து கடைகளும் அடைப்பு

ஆனால் மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் திறந்து இருந்தன. மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் ஊட்டி நகரில் வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது. இதனால் பல சாலைகள் வெறிச்சோடியது. பொதுமக்கள் நடமாட்டமும் குறைவாக இருந்தது. கடைகள் அடைப்பால் கிராமப்புறங்களில் இருந்து ஊட்டிக்கு பொதுமக்கள் குறைந்த அளவே வந்தனர். கூடலூரிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் மருந்து வணிகர்களும் 4 மணி நேரம் மட்டும் தங்களது கடைகளை அடைத்தனர். இதனால் கூடலூர் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. மேலும் ஆட்டோ, ஜீப் டிரைவர்கள் பயணிகள் கிடைக்காமல் காத்து கிடந்தனர். பந்தலூர் தாலுகா மற்றும் மசினகுடி பகுதியிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இது தவிர சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு கூடலூர் புதிய பஸ் நிலைய பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடந்தது. இதில் வியாபாரிகள் சங்க தலைவர் பிரதாபன் மற்றும் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஆர்ப்பாட்டம்

இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வியாபாரிகளை கொலை செய்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் இறப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். கணவரையும், மகனையும் இழந்து வாடும் செல்வராணிக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில குழு உறுப்பினர் பத்ரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆல்தொரை, ராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும் குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. உயிரிழந்த வியாபாரிகளுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

Next Story