கொரோனா தொற்று உறுதியானதால் கோவை எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டுக்கு ‘சீல்’


கொரோனா தொற்று உறுதியானதால் கோவை எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 27 Jun 2020 8:36 AM IST (Updated: 27 Jun 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால் கோவை எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதனால் காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கோவை,

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி பஸ் நிலையம் எதிரில் எம்.ஜி.ஆர். காய்கறி மொத்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று கோவையில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் 150-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் கடை அமைத்து உள்ளனர்.

கேரள மாநிலத்தின் பெரும்பாலான காய்கறி தேவையை கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட் தான் பூர்த்தி செய்கிறது. கொரோனா பரவலை தொடர்ந்து இட நெருக்கடி காரணமாக எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் 112 கடைகளும், அதற்கு எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் 35 கடைகளும் செயல்பட்டன.

மார்க்கெட்டுக்கு ‘சீல்’

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து நேற்று மதியம் கோவை மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்றனர். அந்த மார்க்கெட்டுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றி நிற்பதும் தெரியவந்தது. மேலும் மார்க்கெட் பாதைகளிலும். மழைநீர் வடிகால் அமைப்புகளின் மீதும் ஆக்கிரமிப்பு செய்து காய்கறி மூட்டைகளை வியாபாரம் செய்து கூட்ட நெரிசலை உண்டாக்கி கொரோனா தொற்று பரவ காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே இந்த மார்க்கெட்டில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொது மக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் எம்.ஜி.ஆர். காய்கறி மொத்த மார்க்கெட் கேட்டை மாநகராட்சி பணியாளர்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

அதன்பின்னர் மார்க்கெட்டின் முன்பகுதி முழுவதும் இரும்பு தகடுகளை கொண்டு அடைத்தனர். முன்னதாக மார்க்கெட்டில் இருப்பு வைத்திருந்த காய்கறி மூட்டைகளை வியாபாரிகள் லாரியில் ஏற்றி வெளியில் கொண்டு சென்றனர். மேலும் மார்க்கெட் அருகில் இருந்த தனியார் வாகன நிறுத்துமிடமும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-

காய்கறிகள் விலை உயரும் அபாயம்

எம்.ஜி.ஆர். மார்க்கெட் வியாபாரிகள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. ஆனால் இங்கு வேலை செய்தவர்களுக்கு தான் கொரோனா பாதிப்பு உள்ளது. தற்போது ஒட்டு மொத்த மார்க்கெட்டுக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளதால் இனி வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கோவைக்கு வராது. இதனால் காய்கறிகள் விலை உயரும் அபாயம் உள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பெரிய வெங்காயம், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை அதிகரிக்கும்.

ஏனென்றால் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் காய்கறிகள் இங்குதான் கொண்டு வரப்படுகிறது. வேறு இடத்துக்கு கொண்டு போக முடியாது. மேலும் சென்னை கோயம்பேடு போன்று கொரோனா தொற்று இங்கிருந்து மற்றவர்களுக்கு பரவவில்லை. எனவே வியாபாரிகளின் கோரிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்று மார்க்கெட்டை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story