மதுரை கொரோனா வார்டில் மேலும் 5 பேர் பலி 194 பேருக்கு ஒரே நாளில் தொற்று


மதுரை கொரோனா வார்டில் மேலும் 5 பேர் பலி 194 பேருக்கு ஒரே நாளில் தொற்று
x
தினத்தந்தி 27 Jun 2020 9:51 AM IST (Updated: 27 Jun 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் மேலும் 5 பேர் நேற்று உயிரிழந்தனர். மேலும் ஒரே நாளில் புதிதாக 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி உள்ள மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 944 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் தோப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் 10 பேர் நேற்று முன்தினம் அடுத்தடுத்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் 5 பேர்

இந்தநிலையில் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மேலும் 5 பேர் திடீரென உயிரிழந்தனர். அவர்களில் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 38 வயது பெண் கடந்த 24-ம் தேதி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோல் சின்ன சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த 64 வயது பெண்ணும் இறந்தார். இதனைத்தொடர்ந்து இவர்களது உடல்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவர்களை தவிர மேலும் 3 பேர் அங்குள்ள கொரோனா கண்காணிப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து இறந்தனர். அவர்களுக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், அதன் முடிவுகள் வெளிவரவில்லை எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த 3 பேரும் முதியவர்கள் எனவும், அவர்களுக்கு வேறு சில நோய்களும் இருந்ததாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருக்கிறது.

புதிதாக 194 பேருக்கு தொற்று

இந்தநிலையில் நேற்று மதுரையில் புதிதாக 194 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 52 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மதுரை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என 30 பேரும் உள்ளனர்.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 520 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று அதிக கொரோனா பாதிப்பை பதிவு செய்த மாவட்டங்கள் பட்டியலில் மதுரை, 3-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story