மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை + "||" + 45 thousand corona tested so far in nellai

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதற்கான தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா, நெல்லை மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று நெல்லை வந்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடந்தது. சிறப்பு அதிகாரி அபூர்வா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

600 பேர் குணமடைந்தனர்

பின்னர் சிறப்பு அதிகாரி அபூர்வா, கலெக்டர் ஷில்பா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாட்டத்தில் 823 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 600 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். மீதி உள்ளவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமிநாசினி மூலம் கைகழுவ வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சுமார் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். தனியாக வீடுகளில் இருக்க வசதி இல்லாதவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனை செய்யும் உபகரணங்கள் தேவையான அளவு இருக்கிறது. விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து நெல்லை மாவட்டத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு மாவட்ட எல்லையான காவல்கிணறு சோதனை சாவடியில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வந்தால் அனுப்பி விடுகிறோம்.

தற்போது நெல்லை மாவட்டத்தில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. நெல்லை அரசு மருத்துவமனையில் 1,500 படுக்கை வசதிகள் உள்ளன. சித்த மருத்துவ கல்லூரியில் 200 படுக்கைகள் உள்ளன. அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற கருத்தின்படி, அதனை தடுக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

ராதாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 3 கல்லூரிகளில் கொரோனா வைரஸ் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 30 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஆங்காங்கே சென்று மருத்துவம் செய்து வருகிறார்கள். அவர்களையும் தனிமைப்படுத்தி வருகிறோம். வெளியூரில் இருந்து கங்கைகொண்டான் சோதனை சாவடி வழியாக நெல்லை மாவட்டத்துக்கு ஏராளமானவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு கங்கைகொண்டான எல்காட் வளாகத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.

அதிக நேரம் அங்கு காத்து இருக்க வேண்டியது இருக்கிறது என சிலர் கூறுகிறார்கள். கொரோனா தொற்றுள்ள ஒருவர் ஊருக்குள் வந்தால் போதும். அது அதிகமானவர்களுக்கு பரவி விடும். அதை கவனத்தில் கொண்டு நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம். நெல்லை மாநகர பகுதியில் கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதாக கூறுகிறார்கள். அதை நாங்கள் விரைவில் சரிசெய்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கலந்துகொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன், நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீப் தயாள், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன், நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராட்சலம், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்தின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை முடித்த பின்னர் கங்கைகொண்டான் சோதனை சாவடிக்கு சிறப்பு அதிகாரி அபூர்வா சென்று பார்வையிட்டார். அங்கு பயணிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் வசதிகளை ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் ஷில்பா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம், சிறப்பு அதிகாரி அபுர்வா காணொலி காட்சி மூலம் நலம் விசாரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் உயிரிழந்தனர்.
2. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்
தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
3. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 9 பேர் பலியானார்கள்.
5. வடகொரியாவில் கொரோனா வைரசா? - மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் எச்சரித்தார்.