அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பாதிப்பு


அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2020 10:51 PM GMT (Updated: 27 Jun 2020 10:51 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூரில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 454 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 394 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருந்தனர். 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மாலத்தீவில் இருந்து அரியலூருக்கு வந்த மீன்சுருட்டியை சேர்ந்த 48 வயது ஆண் ஒருவருக்கும் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொடர்பில் இருந்த வஞ்சினாபுரத்தை சேர்ந்த 40, 25 வயதுடைய பெண்களுக்கும், இலுப்பையூரை சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கும் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் 4 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 171 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

3 பேர் பாதிப்பு

இதேபோல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தனது தாத்தாவுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் உதவியாக இருந்த பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூரை சேர்ந்த 19 வயது ஆண் ஒருவரும் மற்றும் காரைக்குடியை சேர்ந்த 70 வயது ஆண் ஒருவரும், அத்தியூரை சேர்ந்த 20 வயதுடைய கர்ப்பிணி ஒருவருக்கும் என மொத்தம் 3 பேர் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் முதியவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மற்ற 2 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இதில் 147 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட 350 பேரின் சளி மாதிரிகளின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 

Next Story