லாலாபேட்டை அருகே தொடர் மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது


லாலாபேட்டை அருகே தொடர் மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 28 Jun 2020 4:53 AM IST (Updated: 28 Jun 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டை அருகே தொடர் மழைக்கு தொழிலாளி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

லாலாபேட்டை,

லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளப்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 48). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான மிகவும் பழமை வாய்ந்த மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக லாலாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவும் அப்பகுதியில் மழை பெய்தது. இதனால் முனியப்பன் வீட்டின் ஒருபக்க சுவர் ஈரப்பதத்துடன் இருந்து வந்தது. இந்தநிலையில், முனியப்பன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த முனியப்பன் உள்பட வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் வெளிப்பகுதியின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து கிடந்தது. இதையடுத்து முனியப்பன் தனது குடும்பத்தினருடன் மாற்று இடத்தில் தங்கி உள்ளார்.

வீட்டிற்கு வெளியே சுவர் விழுந்ததால், வீட்டிற்குள் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த பிள்ளப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி சசிகலா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, முனியப்பனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், வருவாய்த்துறை மூலம் அரசின் நிவாரணத்தொகை பெற்று தருவதாக உறுதியளித்தார்.

Next Story