மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளி ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுப்பு அமெரிக்கா திடீர் பல்டி


மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளி ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுப்பு அமெரிக்கா திடீர் பல்டி
x
தினத்தந்தி 28 Jun 2020 7:04 AM IST (Updated: 28 Jun 2020 7:04 AM IST)
t-max-icont-min-icon

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா திடீர் மறுப்பு தெரிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கடல் மார்க்கமாக ஊடுருவிய பாகிஸ்தான் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் அமெரிக்கர்களும் அடங்குவர். சுமார் 300 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் காசப் தூக்கில் போடப்பட்டார்.

உலகை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாதா தாவூத் இப்ராகிம் வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். லஸ்கர் இ தொய்பா அமைப்புடன் சேர்ந்து இந்த குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட அமெரிக்கரான டேவிட் ஹெட்லி மற்றும் கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியரான தஹாவூர் ராணா ஆவர். இதில் டேவிட் ஹெட்லி அமெரிக்க சிறையில் 35 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தஹாவூர் ராணாவை டென்மார்க் பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் அமெரிக்க போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த வழக்கில், ராணாவுக்கு அமெரிக்க கோர்ட்டு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தஹாவூர் ராணா கூறியதால், கருணை அடிப்படையில் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய சமீபத்தில் அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும், இந்தியா விடுத்த வேண்டுகோளின்பேரில், கடந்த 10-ந் தேதி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து ராணா சார்பில் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு, 30-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. முன்னதாக ராணாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என அமெரிக்க அரசு தரப்பு வக்கீல் ஜான் லுலேஜியன் மனுதாக்கல் செய்தார். இதை எதிர்த்த ராணா தரப்பு, "மும்பை தாக்குதல் வழக்கில் மற்றொரு குற்றவாளியான டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா எந்த முடிவும் எடுக்காத நிலையில் ராணாவை நாடு கடத்தவும் தடைவிதிக்க வேண்டும்" என கூறியது.

இதற்கு பெடரல் கோர்ட்டில் பதில் அளித்த அமெரிக்க அரசு தரப்பு வக்கீல் ஜான் லுலேஜியன், "ராணாவை போல அல்லாமல் ஹெட்லி அவர் செய்த தவறுகளை உடனடியாக ஒப்பு கொண்டார். அவர் செய்த செயல்களுக்கு பொறுப்பேற்று கொண்டாா். ஹெட்லி அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டதால் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ராணாவின் நிலை வேறு. அவர் குற்றத்தை ஒப்பு கொள்ளவும் இல்லை, அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கவும் இல்லை. ஹெட்லி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார் என்பதால், ராணாவும் நாடு கடத்தப்படக்கூடாது என கூற முடியாது" என்றார்.

மேலும் அவர், ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு அங்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல அதிக வாய்ப்பு இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் வாதாடினார்.

மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி டேவிட் ஹெட்லி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார் என்றுஅமெரிக்கா திடீரென பல்டி அடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Next Story