கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3.82 கோடியில் உபகரணங்கள் வழங்கும் விழா 4 அமைச்சர்கள் பங்கேற்பு


கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3.82 கோடியில் உபகரணங்கள் வழங்கும் விழா 4 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Jun 2020 2:26 AM GMT (Updated: 28 Jun 2020 2:26 AM GMT)

குமாரபாளையத்தில் பன்னாட்டு ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள், பள்ளிகளுக்கு பெஞ்ச்-டெஸ்க் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் 4 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல்,

குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள், காவேரி கல்வி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு ரோட்டரி மாவட்டம்-2982, பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை ஆகியவை இணைந்து கொரோனா தடுப்பு நிவாரண பணிக்கு ரூ.3 கோடியே 82 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பெஞ்ச்-டெஸ்க்குகளை வழங்கின.

இதற்கான விழா குமாரபாளையம் எக்ஸல் கன்வென்சன் சென்டரில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுனர் (2019-2020) ஏ.கே.நடேசன் தலைமை தாங்கினார். இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பெஞ்ச்- டெஸ்க்குகளை வழங்கினர்.

ரூ.34,181 கோடி நிதி ஒதுக்கீடு

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியபோது கூறியதாவது:-

அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பெஞ்ச்-டெஸ்க்குகள் மற்றும் மனிதநேயத்தோடு மருத்துவ உபகரணங்கள் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளிக்கல்வித்துறைக்கு இந்தியாவிலேயே வேறுஎந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, ரூ.34,181 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார். இதேபோல் அரசு கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூ.6,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

அடித்தட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, அவர்கள் தரையில் அமர்ந்து படிக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு 1,000 இருக்கைகள் வழங்கி உள்ளனர். தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்குவோம் என புதிய திட்டத்தை தொடங்கி உள்ளனர். இதற்காக ரோட்டரி மாவட்ட ஆளுனர் மற்றும் துணை ஆளுனர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவில் ரோட்டரி சங்கங்கள் 100 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் 1000 ஆண்டுகள் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். இதுபோன்ற பணிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலியோ ஒழிப்பு

விழாவில் அமைச்சர் தங்கமணி பேசியபோது கூறியதாவது:-

இப்பகுதியை சேர்ந்த ரோட்டரி சங்கத்தினர் ஒவ்வொரு முறையும் என்னை விழாவுக்கு அழைப்பார்கள். நான் ஒவ்வொரு முறையும் ஏதாவது கோரிக்கை வைப்பது உண்டு. அடுத்தமுறை என்னை அழைக்கும்போது கடந்த முறை வைத்த கோரிக்கையை நிறைவேற்றிவிட்டு தான் வருவார்கள். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி வருகிறார்கள்.

உலகளவில் போலியோ ஒழிப்புக்கு வித்திட்டது ரோட்டரி சங்கங்கள்தான். இந்தியாவில் ஆண்டுக்கு 2 முறை சொட்டு மருந்து வழங்கி, போலியோ இல்லாத நாடாக மாற்றி உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக உலகளவில் பொருளாதாரம் பின்தங்கி இருந்தாலும், ரோட்டரி சங்கத்தினர் நாங்கள் இருக்கிறோம் என சுமார் ரூ.4 கோடி மதிப்பில் பொருட்களை வழங்கி இருக்கிறீர்கள். உங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தற்போதைய சூழ்நிலையில் மருத்துவ உபகரணங்கள் வழங்குவது சிறப்புக்கு உரியது ஆகும். அரசுடன் இணைந்து உயிர்களை காக்கும் பணியில் நீங்களும் இறங்கி உள்ளர்கள். உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காசோலை

விழாவில் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் சார்பில் ரோட்டரி சங்கத்துக்கு இதுவரை ரூ.1 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு இருப்பதற்கான காசோலையை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடேசன், துணை தலைவர் டாக்டர் மதன் கார்த்திக், நிர்வாக அறங்காவலர் பார்வதி நடேசன் ஆகியோர் அமைச்சர்களிடம் வழங்கினர்.

இதில் மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாவட்ட ஆளுனர்கள் வெங்கடேசன் (தேர்வு), சுந்தரலிங்கம் (நியமனம்), சரவணன் (நியமனம் தேர்வு) மற்றும் மண்டல பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பொதுச்செயலாளர் என்ஜினீயர் சிவசுந்தரம், மாவட்ட அறக்கட்டளை தலைவர் பாபு உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

Next Story