கொரோனா பரவ காரணமாக இருந்த முகக்கவச தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு


கொரோனா பரவ காரணமாக இருந்த முகக்கவச தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Jun 2020 8:40 AM IST (Updated: 28 Jun 2020 8:40 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனா பரவ முக்கிய காரணமாக இருந்த முககவசம் தயாரிக்கும் தொழிற் சாலையின் உரிமையாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை எல்லைகளில் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகிறார்கள். இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இதுவரை 619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 388 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 221 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 10 பேர் கொரோனவுக்கு பலியாகி உள்ளனர்.

தனியார் தொழிற்சாலை

மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த முகக் கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 50-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிற்சாலையில் கொரோனா விதிமீறல்கள் நடந்ததாகவும், இதன்மூலம் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் உழவர்கரை தாசில்தார் குமரன் புகார் செய்தார்.

அதில், தொழிற்சாலையில் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தது, தமிழக பகுதிகளில் இருந்து முறையாக அனுமதி பெறாமல் ஊழியர்களை பணி செய்ய அனுமதித்தது உள்ளிட்ட விதிமீறல்கள் நடந்துள்ளன. இதன் காரணமாக அந்த தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில் கடந்த சில தினங்கள் முன்பு தொழிற்சாலையில் ஏ.சி. பழுது நீக்குவதற்காக கல்பாக்கம் பகுதியை சேர்ந்த 3 பேர் வந்து சென்றுள்ளனர். அவர்கள் மூலமாக கொரோனா தொற்று பரவியது அம்பலமானது.

வழக்குப்பதிவு

அதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் முகக் கவச தொழிற்சாலை உரிமையாளர் லாஸ்பேட்டையை சேர்ந்த சமிர் காம்ரா மற்றும் கல்பாக்கம் விசுவசமுத்திரம் வயலூர் தான்தோனி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக்குகள் பிரகாஷ், கண்ணபிரான், ராஜேஷ் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் சமிர் காம்ரா தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story