கொடைக்கானல் பகுதியில் காய்த்து குலுங்கும் ஆப்பிள் பழங்கள்


கொடைக்கானல் பகுதியில் காய்த்து குலுங்கும் ஆப்பிள் பழங்கள்
x
தினத்தந்தி 28 Jun 2020 3:32 AM GMT (Updated: 28 Jun 2020 3:32 AM GMT)

கொடைக்கானல் பகுதியில் ஆப்பிள் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ யான கொடைக்கானல் குளு, குளு சீசனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. சுண்டி இழுக்கும் சுவை கொண்ட ஆப்பிள் பழ சாகுபடிக்கும் பிரசித்தி பெற்றதாகும். கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த 15 ஆண்டுகளாக ஆப்பிள் சாகுபடி நடந்து வருகிறது.

கொத்துக்கொத்தாய் மரங்களில் காய்த்து குலுங்கும் ஆப்பிள் பழங்களை பார்த்து ரசிப்பது, சுற்றுலா பயணிகளுக்கு கொள்ளை இன்பத்தை அள்ளித்தரும். குறிப்பாக கொடைக்கானல் அப்சர்வேட்டரி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பழப்பண்ணை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் தோட்டங்களிலும் ஆப்பிள் மரங்கள் உள்ளன.

தனித்துவ சுவை

கொடைக்கானலில் விளையும் ஆப்பிள்கள் தனி சுவை கொண்டதாகும். இனிப்பு மற்றும் புளிப்பு தன்மையுடன் இருக்கும். இதன் தனித்துவமான சுவையினால் சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கொடைக்கானல் பகுதியில் விளையும் ஆப்பிள்களுக்கு மருத்துவ குணம் இருப்பதாக கருதப்படுகிறது.

இதனையடுத்து ஆப்பிள்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். இதுமட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இந்த ஆப்பிள்களை ஆர்வமுடன் வாங்கி செல்வர். ஆனாலும் ஆப்பிள் பழ சாகுபடியில் ஈடுபடுவோருக்கு எதிர்பார்த்த அளவு வருமானம் கிடைக்கவில்லை. இதனால் ஆப்பிள் மரங்கள் பராமரிக்கப்படாமல் விடப்பட்டன. இதன் எதிரொலியாக கொடைக்கானல் பகுதியில் ஆப்பிள் மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

காய்த்து குலுங்கும் பழங்கள்

தற்போது கொடைக்கானல் அரசு பழப்பண்ணை மற்றும் சின்னப்பள்ளம் பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆப்பிள் மரங்கள் உள்ளன. இந்த மரங்கள், ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் காய்க்கும் தன்மை உடையது. அதன்படி தற்போது பழப்பண்ணையில் உள்ள மரங்களில் ஏராளமான ஆப்பிள்கள் காய்த்து குலுங்குகின்றன.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் ஆப்பிள் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பழங்களை, கொடைக்கானல் நகரவாசிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.

Next Story