கோவை மாவட்டத்தில் பெண் டாக்டர்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா 3 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்


கோவை மாவட்டத்தில் பெண் டாக்டர்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா 3 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்
x
தினத்தந்தி 28 Jun 2020 9:09 AM IST (Updated: 28 Jun 2020 9:09 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் பெண் டாக்டர்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா பாதித்து உள்ளது. இதனால் 3 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன.

கோவை,

கோவையில் இந்த மாதம் தொடக்கம் முதல் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்புடன் நோயாளி ஒருவர் சிகிச்சைக்கு வந்து உள்ளார். இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்கள், டாக்டர்களின் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆஸ்பத்திரி பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி ஊழியர்கள், பெண் டாக்டரின் வீட்டில் உள்ளவர்கள், பணியாளர்கள் உள்பட 75 பேருக்கு சளி, ரத்தபரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் ஆஸ்பத்திரி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்பத்திரி மூடல்

அதுபோன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த பெண் பயிற்சி டாக்டருக்கு சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த டாக்டர் பணியாற்றி வந்த சிகிச்சை பிரிவில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதேபோல் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அத்துடன் அந்த ஆஸ்பத்திரியும் நேற்று மூடப்பட்டது. அதுபோன்று காரமடையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரியும் மூடப்பட்டது.

10 வயது சிறுவன்

பொள்ளாச்சி கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவரது மனைவி மற்றும் 10 வயது மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதேபோல் தூய்மை பணியாளரின் சகோதரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆழியார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

துடியலூர் தனியார் உணவகத்தை சேர்ந்த 29 வயது ஆண், 21 வயது ஆண், 25 வயது ஆண், 22 வயது ஆண் மற்றும் அங்குள்ள விஸ்வநாதபுரத்தை சேர்ந்த 28 வயது பெண், 45 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.

கடைகள் மூடப்பட்டன

கே.கே.புதூரை சேர்ந்த 26 வயது பெண், 23 வயது ஆண், 45 வயது ஆண், 48 வயது ஆண் ஆகிய 4 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் சூலூர் அபிராமி அவென்யூவை சேர்ந்த 16 வயது சிறுமி, கோவை பூமார்க்கெட்டை சேர்ந்த 36 வயது வியாபாரி, ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 27 வயது ஆண், செம்மாண்டம்பாளையத்தை 45 வயது பெண், இடையர்பாளையத்தை சேர்ந்த 52 வயது ஆண், எம்.ஜி.ஆர். மார்க்கெட்டை சேர்ந்த 46 வயது ஆண், சரவணம்பட்டி பெரியார் நகரை சேர்ந்த 50 வயது ஆண் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

பி.கே.புதூர் பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், லங்கா கார்னர் பகுதியில் உள்ள ஒரு கடையின் 32 வயது ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. மேலும் அவருடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் சுகாதார துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

428-ஆக உயர்வு

கோவையில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 428 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அங்கு பொதுமக்கள் செல்வதை தடுக்க சீல் வைக்கப்பட்டு உள்ளது. 

Next Story