சிறுமுகை வனப்பகுதியில் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை


சிறுமுகை வனப்பகுதியில் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 28 Jun 2020 10:40 PM GMT (Updated: 28 Jun 2020 10:40 PM GMT)

சிறுமுகை வனப்பகுதியில் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம்,

கோவை வனக்கோட்டத்துக்குட்பட்ட சிறுமுகை வனச்சரக பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தைப்புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் வனச்சரக அதிகாரி செந்தில்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்குள் ரோந்து சென்றனர். அவர்கள் பெத்திக்குட்டை அருகே பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் வந்தபோது அங்கு ஒரு யானை சோர்வுடன் படுத்திருந்தது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ், கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள், வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

வனத்துறையினர் சிகிச்சை

பின்னர் கால்நடை மருத்துவர்கள் அந்த காட்டு யானையை பரிசோதித்தனர். அத்துடன் வெயிலின் தாக்கத்தை குறைக்க அந்த யானை படுத்திருந்த இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டது. மேலும் யானையின் உடல் வெப்பத்தை தணிக்க அதன் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது. அதற்கு குடிநீரும் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சையை தொடங்கினர். யானைக்கு பப்பாளி, தர்பூசணி, வாழைப்பழங்களில் மருந்து மாத்திரைகள், அச்சு வெல்லம் ஆகியவை வைத்து கொடுக்கப்பட்டது. யானையின் உடல் சோர்வை போக்குவதற்காக குளுக்கோஸ் கொடுக்கப்பட்டதுடன், ஊசி மூலம் மருந்தும் செலுத்தப்பட்டது.

மாலை நேரம் இருட்டு தொடங்கியதால் சக்தி வாய்ந்த விளக்குகள் அமைத்து அந்த யானைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் யானையை எழுந்து நிறுத்துவதற்கான முயற்சிகள் வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, சோர்வுடன் படுத்துக்கிடந்தது ஆண் யானை ஆகும். அதற்கு 7 வயது இருக்கலாம். பவானி சாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் தவறி விழுந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story